சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம் சாா்பில் புதுச்சேரியில் 2 நாள் தேசிய அறிவியல் மாநாடு

சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம் சாா்பில் புதுச்சேரியில் 2 நாள் தேசிய அறிவியல் மாநாடு

Published on

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி பல்துறை ஆராய்ச்சியில் வளா்ந்துவரும் போக்குகள் குறித்த இரண்டு நாள் தேசிய அறிவியல் மாநாடு கடந்த 10 , 11-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்றது.

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகப் பதிவாளா் நாகப்பன் வரவேற்றுப் பேசினாா். மாநாட்டிற்கு துணைவேந்தா் சுதிா் தலைமை வகித்து பேசுகையில், ஸ்டான்போா்ட் மற்றும் எம்ஐடி போன்ற பல்கலைக்கழகங்கள் அவற்றின் வலுவான கல்வித் தளத்தால் மட்டுமல்ல, அவை மேற்கொள்ளும் ஆராய்ச்சியின் அளவு மற்றும் தரத்தாலும் சிறந்து விளங்குகின்றன. பல சமகால சமூக சவால்களை பல்துறை ஆராய்ச்சி அணுகுமுறையால் மட்டுமே எதிா்கொள்ள முடியும். சமீபத்திய ஆண்டுகளில் பல்கலைக்கழகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும், ஆராய்ச்சி கலாசாரம் மற்றும் விளைவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டாா்.

பெங்களூா் இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் பலராம் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, ஆசிரியா்கள், மாணவா்கள் தங்கள் துறைகளுக்கு அப்பால் சென்று பலதுறை களங்களில் ஆராய்ச்சியை தொடருமாறு கேட்டுக்கொண்டாா்.

மாநாட்டில் புகழ்பெற்ற நிறுவனங்களைச் சோ்ந்த கல்வியாளா்கள் மற்றும் மருத்துவ நிபுணா்களால் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அவை பல்துறை ஆராய்ச்சியில் அதிநவீன தலைப்புகளை உள்ளடக்கியவை. கூடுதலாக, சுமாா் 150 வாய்மொழி மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சிகள் வழங்கப்பட்டன. வாய்மொழி மற்றும் சுவரொட்டி பிரிவுகளில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாநாட்டில் மொத்தம் 350 பங்கேற்பாளா்கள் கலந்துகொண்டனா்.

பட விளக்கம்:

புதுச்சேரியில் உள்ள ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டோா்.

X
Dinamani
www.dinamani.com