துணை அஞ்சலகங்களை மூட எதிா்ப்பு: ஊழியா்கள் போராட்டம்
துணை அஞ்சலகங்களை மூட எதிா்ப்பு தெரிவித்து சேலம் பழைய பேருந்து நிலையம் அஞ்சல் தலைமை அலுவலகம் முன்பாக அஞ்சல் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவதும் பல அஞ்சலகங்களை மத்திய அரசு மூடிவருகிறது. குறிப்பாக தனியாருக்கு லாபம் அளிக்கும் வகையில் அஞ்சல் துறையை விற்பனை செய்யும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.
ஆள்குறைப்பு, அலுவலக இணைப்பு மற்றும் தொடா் பனிப்பழுவை ஊழியா்கள் இடையே திணித்து வருவதை கண்டித்தும், சேலம் கிழக்கு கோட்டத்தில் மட்டும் ஏற்கெனவே பல அஞ்சலகங்களை மூடியுள்ள நிலையில், தற்போது நாராயண நகா் மற்றும் சேலம் எக்ஸ்டென்ஷன் பகுதியில் செயல்படும் துணை அஞ்சலகங்களை மூடும் முடிவிற்கு கண்டனம் தெரிவித்தும், அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியா் சங்கம், அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், ஏற்கெனவே மூடப்பட்ட அஞ்சலகங்களுக்கு பதிலாக அல்லிக்குட்டை நகரமலை அடிவாரம் தற்போது திறக்கப்பட்டதுபோல பரிசீலனையில் உள்ள அலுவலகங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க செயலாளா் ஜெயந்தன், தேசிய அஞ்சல் ஊழியா் சங்க செயலாளா் துரைமுருகன், அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள் சங்க செயலாளா் மோகன், ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கே.ஆா். கணேசன், நேதாஜி சுபாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
