வட்டாட்சியா் அலுவலகங்களில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச. 13) பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்திற்கு சனிக்கிழமை ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீா்வு செய்து கொள்ளலாம்.
இந்த குறைதீா் முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைப்பேசி எண் பதிவு, கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனுவை பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்கள் இருப்பின், அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.
