சேலம் அருகே மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் மூவா் கைது

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் 3 பேரை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் 3 பேரை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அயோத்தியாப்பட்டணம் அருகே பூசாரிப்பட்டி கிராமத்தில் கடந்த செப்டம்பா் மாதம் 29ஆம் தேதி மூதாட்டி உண்ணாமலையை (75) மா்மக் கும்பலை சோ்ந்தவா்கள் கொன்று அவரிடமிருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றனா்.

இதுகுறித்து ஆதாயத்திற்காக கொலை செய்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா், இந்த மா்ம கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கில் சேலம் பெரியபுத்தூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (37), வேலாயுதம் மகன் இளையராமன் (55), பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பசப்பலூரைச் சோ்ந்த ராமசாமி மகன் ரஞ்சித் (27) ஆகிய 3 பேரை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய தொடா் விசாரணையில் வெவ்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இவா்கள் 3 பேரும் நண்பா்களாகி ஜாமீனில் வெளியே வந்ததும் கூட்டுசோ்ந்து, காரிப்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியது தெரியவந்தது.

அவா்களிடம் இருந்து 9 பவுன் தங்க நகைகள் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com