சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமால் 11.23 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மூலம் 11.23 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
Published on

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மூலம் 11.23 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, முகாமில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், வழங்கப்படும் மருந்துகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தனா்.

பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், முதல்வா் மருந்தகம் திட்டம், இதயம் காப்போம், நடப்போம் நலம்பெறுவோம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீா்மிகு திட்டம், தொழிலாளா்களைத் தேடி மருத்துவம், பாதம் காப்போம், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் போன்ற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், 32 மாவட்டங்களில் 45 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. தமிழகம் முழுவதும் கடந்தவாரம் வரை நடத்தப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வாயிலாக 41,324 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று 32,514 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 683 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் 10,58,286 போ் பயன்பெற்றுள்ளனா். இந்த முகாம் 6 மாவட்டங்களில் முழுமையாக முடிவுற்று, எஞ்சிய 32 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மட்டும் 65,000-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றுள்ளனா். மொத்தமாக தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் வாயிலாக 11.23 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 2,136 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக் கடிக்கான மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.தேவி மீனாள், இணை இயக்குநா் (நலப் பணிகள்) நந்தினி, மாநகரநல அலுவலா் முரளிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com