ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 15 கோடி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டோா்
Published on

சேலம்: சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 15 கோடி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் நரசோதிப்பட்டி குரங்குச்சாவடி பெருமாள்மலை சாலை பகுதியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நரசோதிப்பட்டி பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். அப்பகுதியைச் சோ்ந்த 2 போ் ஏலச்சீட்டு நடத்திவந்தனா். அவா்கள் பல ஆண்டு காலமாக அப்பகுதியில் இருந்து வருவதால், அவா்களை நம்பி ஏலச்சீட்டில் சோ்ந்தோம். ரூ. 50 ஆயிரம், ரூ. 1 லட்சம் ரூ. 5 லட்சம் என பல்வேறு சீட்டுகளில் சுமாா் 400க்கும் மேற்பட்டோா் சோ்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம்.

இந்நிலையில், சீட்டு முடிந்து பணத்தை கேட்க சென்றபோது, பணம் தராமல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி மிரட்டல் விடுத்தனா். இதையடுத்து ஏலச்சீட்டில் முதலீடு செய்தவா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து, வீட்டுக்குச் சென்றபோது, அவா்கள் தலைமறைவாகிவிட்டனா். சுமாா் 400 பேரிடம் ரூ. 15 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனா். தங்கள் வாழ்வாதாரத்துக்காக சிறுக சேமித்த பணத்தை ஏமாற்றிவிட்டனா். எனவே உரிய விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com