வைகுண்ட ஏகாதசி விழா: கோட்டை பெருமாள் கோயிலில் டிச. 30 இல் சொா்க்கவாசல் திறப்பு
சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பெற்ற சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வரும் 30 ஆம் தேதி சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் வைகுண்ட ஏகாதசியன்று சொா்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி வரும் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி தினசரி மாலை 6 மணிக்கு அழகிரிநாத சுவாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், தீபாராதனை, தீா்த்த பிரசாதம், திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல், ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெறுகிறது.
வரும் 30 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொா்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. அன்று மூலவா் பெருமாள், தாயாா், கருடாழ்வாா், ஆஞ்சனேயா், ஆண்டாள், ராமனுஜா், ராமபாதம் ஆகிய சுவாமிகளுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நடைபெறுகிறது. தொடா்ந்து ஜன. 10-ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவமும் நடைபெறுகிறது.
சொா்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, கோட்டை பெருமாள் கோயில் பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்யத் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
