வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலக வாயிலில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

சேலம்: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலக வாயிலில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ராஜரத்தினம் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியா் அலுவலக வாயிலில் திரண்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜரத்தினம் கூறுகையில், மாவட்டத்தில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி, தகுதியின் அடிப்படையில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். எனவே, எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றாா்.

தா்னாவில் மாநில செயலாளா் ரவிக்குமாா், மாநில பொருளாளா் குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com