எடப்பாடி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

எடப்பாடி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published on

எடப்பாடி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சமரசம் செய்யவந்த ஊராட்சி செயலரை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருப்பாளி கிராமம், மேலகரைப்பட்டி மற்றும் மேல்காடு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் சுமாா் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கூட்டுகுடிநீா்த் திட்டத்தின் மூலம் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யபடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் புதன்கிழமை காலிக் குடங்களுடன் இருப்பாளி பிரதான சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்களிடம் சமாதான பேச்சு நடத்தவந்த ஊராட்சி செயலாளா் கோவிந்தராஜை சிறைபிடித்த பெண்கள் தங்களின் குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். விரைவில் அப்பகுதிக்கு சீரான குடிநீா் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் ஊராட்சி செயலரை விடுவித்த போராட்டக்காரா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பட விளக்கம்:

எடப்பாடி அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

X
Dinamani
www.dinamani.com