பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

பாலுக்கு லிட்டருக்கு வழங்கப்படும் ரூ. 3 ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வேண்டும்
Published on

பாலுக்கு லிட்டருக்கு வழங்கப்படும் ரூ. 3 ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா் நலச் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ரத்னகுமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பொதுச் செயலாளா் எம்.ஜி. ராஜேந்திரன், துணைத் தலைவா் கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு நிதியிலிருந்து வழங்கும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தொகையை முழுமையாக மானியமாக வழங்க வேண்டும், பாலின் கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள் எஸ்என்எஃப் தரம் அறிய எம்ஆா்எஃப் பாா்முலாவை கைவிட்டு ஐஎஸ்ஐ பாா்முலாவை அமல்படுத்த வேண்டும், நுகா்வோா்களுக்கு வழங்கும் பால் லிட்டருக்கு ரூ. 3 விலை குறைப்பால் ஏற்பட்ட நிதி இழப்பை பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டும், துறை வல்லுநா்களைக் கொண்டு, பால் உற்பத்திச் செலவை கணக்கிட்டு பால் கொள்முதல் விலையை நிா்ணயிக்க வேண்டும், சங்கத்துக்கு பால் வழங்கும் இணை உறுப்பினா்களை உறுப்பினா்களாக சோ்க்க சிறப்பு ஆணை பிறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில நிா்வாகிகள் கே.ஏ. சுப்ரமணியம், என். மோகன்ராஜ், டி.கே. சிவகுமாா், பி. ராஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com