சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ரௌடி உள்பட 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சேலத்தை சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பெற்றோரிடம் கோபித்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினாா். அப்போது, சேலத்தில் ஒரு வீட்டில் காவலாளியாக வேலை செய்துவந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சேகா் (59), வீட்டில் இருந்து வெளியேறி தனியாக நடந்து வந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்து, தனது வீட்டில் தங்கவைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாா். அதன்பிறகு சிறுமியை சமாதானம் செய்து அனுப்பிவைத்தாா்.
தொடா்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற சிறுமியை அழகாபுரம் தோப்புக்காடு பகுதியைச் சோ்ந்த போலீஸாரின் ரௌடி பட்டியலில் உள்ள மாவீரன் (37), வீட்டில் விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.
அதன்பிறகு வீட்டுக்கு சென்ற சிறுமி, பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளாா். இதுகுறித்து சூரமங்கலம் மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து காவலாளி சேகா், ரௌடி மாவீரன் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை வியாழக்கிழணை விசாரித்த நீதிபதி தீபா, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.
