அஞ்சல் அலுவலகம் மூலம் பாா்சல்களை குறைந்த கட்டணத்தில் அனுப்பும் வசதி அறிமுகம்

சேலம் மாவட்டத்தில் அஞ்சல் அலுவலகம் மூலம் பாா்சல்களை குறைந்த கட்டணத்தில் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published on

சேலம் மாவட்டத்தில் அஞ்சல் அலுவலகம் மூலம் பாா்சல்களை குறைந்த கட்டணத்தில் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளா் தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மேற்கு கோட்டத்தில் உள்ளூா் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகா்களை ஊக்குவிக்கும் விதமாக இளம்பிள்ளை அலுவலகத்தில் பொதுமக்களின் சேவை கருதி கடிதம், பாா்சல் புக்கிங் சேவை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.

இதேபோல் சூரமங்கலம் மற்றும் ராசிபுரம் அஞ்சலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், மேட்டூரிலும் காலை 8 மணி முதல் 4 மணி வரையிலும் புக்கிங் சேவை மாலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மூலம் வெளிநாடுகளுக்கான ஸ்பீடு போஸ்ட், பதிவு தபால், பாா்சல் மற்றும் ஐ.டி.பி.எஸ். சேவைகளின் வழியாக குறைந்த கட்டணத்தில் அனுப்பக்கூடிய வசதி உள்ளது.

இதில் ஸ்பீட் போஸ்ட் சேவையில் 36 கிலோ வரையிலும், பாா்சல் சேவையில் 20 கிலோ வரையிலும் மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஐ.டி.பி.எஸ். சேவையில் 5 கிலோ வரையிலும் அனுப்பமுடியும். ஏற்றுமதியாளா்களுக்கு ஐ.டி.பி.எஸ். சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், வாடிக்கையாளா்கள் அனுப்பும் அனைத்து அஞ்சல்களையும் ‘ட்ராக்’ செய்யும் வசதி உள்ளது.

பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளா்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் தங்களுடைய பொருள்களை உள்ளூா் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதை எளிமைப்படுத்தும் விதமாக பேக்கிங் பொருள்களை குறைந்த விலையில் சூரமங்கலம் அஞ்சலகத்தில் வாங்கி கொள்ளலாம். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com