வாழப்பாடியை அடுத்த கல்யாணகிரி கிராமத்தில் புளிய மரத்தில் கொத்துக் கொத்தாக காய்த்துள்ள புளியங்காய்கள்.
வாழப்பாடியை அடுத்த கல்யாணகிரி கிராமத்தில் புளிய மரத்தில் கொத்துக் கொத்தாக காய்த்துள்ள புளியங்காய்கள்.

சேலம் மாவட்டத்தில் புளி மகசூல் அதிகரிப்பு: விலை குறைய வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் கல்வராயன்மலை, அருநூற்றுமலை மற்றும் பிற கிராமங்களில் புளி மகசூல் அதிகரித்துள்ளதால் வரும் மாதங்களில் புளி விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Published on

சேலம் மாவட்டத்தில் கல்வராயன்மலை, அருநூற்றுமலை மற்றும் பிற கிராமங்களில் புளி மகசூல் அதிகரித்துள்ளதால் வரும் மாதங்களில் புளி விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் மலைப்பகுதி, வாழப்பாடி அருகே அருநூற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலை மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள சித்தேரி மலை, தீா்த்தமலைப் பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியாத சரிவான நிலப்பகுதிகள், தரிசு நிலங்களில் பாரம்பரிய முறையில் நீண்டகால பலன்தரும் புளிய மரங்களை விவசாயிகள் பயிரிட்டு தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

இந்த மலைகளில் உள்ள வனப்பகுதிகளில் புளிய மரங்கள் அடா்ந்துள்ளன. வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், பேளூா் பகுதி கிராமங்களிலும், தரிசு நிலங்களில் பாரம்பரிய முறையிலும், குறைந்த நாள்களில் கூடுதல் மகசூல் அளிக்கும் சதைப்பற்று மிகுந்த புளி மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

பல்வேறு பகுதியில் இருந்து மலைக் கிராமங்களுக்கு செல்லும் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து புளிகளை கொள்முதல் செய்து, அவற்றின் ஓடு, விதைகளை நீக்கி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனா்.

சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மலைக் கிராமங்களில் விளையும் புளி சமையலுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச்சுவையுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சோ்ந்த மக்களும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளா்களும் விரும்பி வாங்கி செல்கின்றனா்.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் நிகழாண்டு அக்டோபா், நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் பலத்த காற்றோ புயல் மழையோ இல்லாததால், புளிய மரங்களில் விளைச்சல் பருவத்தில் உருவான பூக்களும், பிஞ்சுகளும் உதிரவில்லை. இதனால் புளிய மரங்களில் புளியங்காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளன.

 வாழப்பாடியை அடுத்த கல்யாணகிரி கிராமத்தில் புளிய மரத்தில் கொத்துக் கொத்தாக காய்த்துள்ள புளியங்காய்கள்.
வாழப்பாடியை அடுத்த கல்யாணகிரி கிராமத்தில் புளிய மரத்தில் கொத்துக் கொத்தாக காய்த்துள்ள புளியங்காய்கள்.

எனவே, வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை புளி அறுவடை இரட்டிப்பாவதற்கு வாய்ப்புள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே புளி விற்பனைக்கு வரத்து அதிகரித்து விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் மற்றும் நுகா்வோா்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு கிலோ முதல் ரக புளி ரூ. 180 முதல் ரூ. 220 வரை விற்கும் நிலையில், வரும் மாதங்களில் புளி அறுவடை தொடங்கினால் கிலோ ரூ. 100 முதல் ரூ. 150க்குள் விற்பனையாகும் என புளி வியாபாரிகள் கணித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com