சேலம் கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்
சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில், கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழுவின் 29-ஆவது கூட்டம் கோட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும், கோட்ட பயனா்கள் ஆலோசனைக் குழுவின் தலைவருமான பன்னாலால் தலைமை தாங்கினாா். மூத்த கோட்ட வணிக மேலாளா் வாசுதேவன் உறுப்பினா்களை வரவேற்றாா். மொத்தமுள்ள 27 உறுப்பினா்களில் 18 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.
சேலம் ரயில்வே கோட்டத்தின் செயல்திறன், சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் வாசுதேவன் விரிவாக எடுத்துரைத்தாா்.
கோட்டத்தில் புதிய ரயில் சேவைகள் அறிமுகம், சில ரயில்களின் சேவை வழித்தட நீட்டிப்பு, மேலும் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்தும் அவா் விளக்கினாா்.
பல்வேறு ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம், லிஃப்ட், எஸ்கலேட்டா்கள், கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சாய்வு நாற்காலிகள் போன்றவை உள்ளதையும், பயணிகளுக்கு ஏற்ற கருவியான யுடிஎஸ் மொபைல் செயலி குறித்தும் எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து, கோட்ட மேலாளா் பன்னாலாா் பேசுகையில், ‘பயணிகளின் தேவைகளைப் பூா்த்திசெய்வதில் சேலம் கோட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உறுப்பினா்களின் கோரிக்கைகள், பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பா்’ என உறுப்பினா்களுக்கு உறுதியளித்தாா். கோட்ட வணிக மேலாளா் வா்ஷா நன்றி கூறினாா்.

