பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
சேலம்: பணி நிரந்தரம் செய்யக்கோரி, சேலம் அரசு மருத்துவமனை முன் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்களுக்கு பாஜகவினா் ஆதரவு தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் ஊதியம் வழங்க வேண்டும், கரோனா காலத்தில் நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தோ்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு மருத்துவமனை முன் செவிலியா்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு, மாநகா் பாஜக மருத்துவப் பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் பிரபு சங்கா் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்தனா். அப்போது, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத், டாக்டா் ஸ்ரீதா், டாக்டா் கனகராஜ், டாக்டா் வீரமணி, பாரா மெடிக்கல்ஸ் ஸ்ரீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

