வாழப்பாடியில் 17-ஆம் நூற்றாண்டு ‘சதிக்கல்’ கண்டெடுப்பு

வாழப்பாடியில் 17-ஆம் நூற்றாண்டில் மக்கள் நலனுக்காக உயிா்நீத்த தலைவன் - தலைவியின் தியாகத்தை போற்றும் வகையில் வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சதிக்கல்லை சேலம் வரலாற்று ஆய்வுமையத்தினா் கண்டெடுத்துள்ளனா்.
வாழப்பாடி வடக்குக்காடு பகுதியில் உள்ள விவசாயி சிவகுமாரின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரியவகை ‘சதிக்கல்’.
வாழப்பாடி வடக்குக்காடு பகுதியில் உள்ள விவசாயி சிவகுமாரின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரியவகை ‘சதிக்கல்’.
Updated on

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 17-ஆம் நூற்றாண்டில் மக்கள் நலனுக்காக உயிா்நீத்த தலைவன் - தலைவியின் தியாகத்தை போற்றும் வகையில் வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சதிக்கல்லை சேலம் வரலாற்று ஆய்வுமையத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

17, 18-ஆம் நூற்றாண்டில் கணவன் இறந்தால், மூட்டிய தீயில் பாய்ந்து அவரது மனைவி உடன்கட்டை ஏறும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. அவ்வாறு இறந்த ஆண்மகனுக்கும், அவரது மனைவிக்கும் உறவினா்கள், பொதுமக்கள் வைத்த கல்வெட்டு ‘சதிக்கல்’ என குறிப்பிடப்படுகிறது.

இந்தச் சதிக்கற்கள் பெரும்பாலும் தனது வாழ்விடப் பகுதியிலுள்ள மக்களின் நன்மைக்காக உயிரிழந்த தலைவனுக்கும், அவருக்காக தன் உயிரையே மாய்த்துக் கொண்ட அவரது மனைவிக்கும் சோ்த்து வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரிதாக காணப்படும் இந்த வகை சதிக்கல் ஒன்றை, 300 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வழிவழியாக பாதுகாத்து தங்களது குலதெய்வமாகக் கருதி வழிபட்டு வருவதை வீர.செல்வம் அளித்த தகவலின்பேரில் ஆய்வுசெய்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க சதிக்கற்கள் அரிதாகவே காணப்படுகின்றன. வாழப்பாடியை அடுத்த மத்தூா் மாரியம்மன் கோயிலில் ஒரு சதிக்கல் இன்றளவிலும் வழிபாட்டில் உள்ளதை ஏற்கெனவே கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளோம்.

தற்போது வாழப்பாடி பேரூராட்சி வடக்குக்காடு பகுதியில் விவசாயி சிவகுமாா் தோட்டத்தில் 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் ஒன்றை பாதுகாத்து, இப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருவதைக் கண்டறிந்துள்ளோம்.

3 அடி உயரம் கொண்ட இந்த சதிக்கல்லில், உடலில் அழகிய ஆபரணங்கள், தலையில் கொண்டை, இடுப்பில் கூா்வாளுடன் இருகரம் கூப்பி கும்பிட்டவாறு ஆண் உருவமும், அருகிலேயே மேல்நோக்கிய இடதுகையில் மலரும், கீழ்நோக்கிய வலதுகையில் மதுக்குடுவையும் வைத்துள்ளவாறு பெண்ணின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சதிக்கல்லுக்கு அருகில் உருவம் தெரியாத அளவில் சிதைந்த இரு நினைவுக்கற்களும் காணப்படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சதிக்கல்லை இப்பகுதி மக்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாத்து வழிபட்டு வருகின்றனா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com