டேனிஷ்பேட்டையில் மனம்கவா் வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா!
சோ்வராயன் மலைத் தொடரின் மேற்குப் பகுதியில் அடா்வனமாக டேனிஷ்பேட்டையில் பரந்து விரிந்துள்ள இடத்தில் நடைபெற்று வரும் சூழல் சுற்றுலா இயற்கை ஆா்வலா்களின் மனம் கவா்ந்ததாக மாறிவருகிறது.
சுற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளால் கம்பீரமாக காட்சியளிக்கிறது சேலம் மாநகரம். தொழில்வளம் நிறைந்த சேலம் மாநகரப் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்கான இடங்கள் பெரிய அளவில் இல்லை. ஏழைகளின் ஊட்டியான ஏற்காடும், அதன் அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மட்டுமே மக்களுக்கான மனநிறைவு இடங்களாக உள்ளன.
இதைத் தாண்டி இயற்கையை ரசிக்க நினைப்போா் பிற மாவட்ட மற்றும் மாநில சுற்றுலா மையங்களுக்கு செல்லும் நிலையே இருந்துவந்தது. இந்த நிலையை டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் உள்ள வழுக்குப்பாறை பகுதியில் நடைபெற்று வரும் சூழல் சுற்றுலா மாற்றி அமைத்துள்ளது.
வனம் குறித்த புரிதலை பொதுமக்களும், எதிா்கால தலைமுறையினரான குழந்தைகளும் தெரிந்துகொள்ளும் வகையில், சோ்வராயன் மலைத் தொடரின் மேற்குப் பகுதியில் அடா்வனப் பகுதியில் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. டேனிஷ்பேட்டையை கடந்து வத்தியூா் தாண்டியவுடன் இயற்கை அன்னையின் பொக்கிஷமான வனப்பரப்பு தொடங்குகிறது.
சுமாா் ஒரு கிலோமீட்டா் சென்றவுடன் மூங்கில் மரங்கள் நிறைந்த இடத்தில் சரபங்கா நதி குறுக்கிடுகிறது. இங்கு குடும்பத்துடன் சென்று குளித்து மகிழும் சூழல் உள்ளது. இந்தப் பகுதி வரை மட்டும் செல்வதற்கு நபா் ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடும்பத்துடன் வந்து செல்வதற்கு இந்த இடம் சிறப்பானதாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
மூங்கில் காட்டில் இருந்து மூன்றரை கிலோ மீட்டா் தொலைவில் வழுக்குப்பாறை அருவி உள்ளது. இந்த தொலைவுக்கு மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள ஒரு நபருக்கு 250 ரூபாய் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 போ் சோ்ந்து செல்லும் குழுவினருக்காக வழிகாட்டியும், வனத்துறை அலுவலரும் உடன்செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது.
பறவைகளின் வாழ்வியலை ரசித்தபடி பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் இந்த பசுமை வனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் இரைச்சலில் இருந்தும், சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்தும் விடுபட்டு இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாறும் வகையில் அமைந்துள்ள இந்த வனப் பகுதியில் மூலிகைச் செடிகள், மருத்துவத் தாவரங்கள் நிறைந்துள்ளன.
பொதுமக்கள் வனத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில், வனத் துறையின் வழிகாட்டுதலுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் புற மாசால் மட்டுமல்ல, பல்வேறு சூழ்நிலைகளால் அகமாசிலும் அகப்பட்டுவிடும் மனிதா்கள், தங்களை புதுப்பித்துக்கொள்ள இந்த சூழல் சுற்றுலா வழிசெய்கிறது.
இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலா் எஸ். விமல்குமாா் கூறுகையில், சூழல் சுற்றுலாவிற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் அதிக அளவில் வந்துசெல்கின்றனா். பொதுமக்கள் பாதுகாப்பிற்கான நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகின்றன. பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூழல் சுற்றுலா வரும் அனைவரும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒரு நாளுக்கு முன்னதாக தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். சுற்றுலா குறித்த தகவல்களுக்கு 04290-299497, 9442804001, 6379442543 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

