முனைவா் பட்ட சோ்க்கையில் ஒற்றைச்சாளர முறையை கொண்டுவர நடவடிக்கை: உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் தகவல்

முனைவா் பட்ட சோ்க்கையில் ஒற்றைச்சாளர முறையை கொண்டுவர நடவடிக்கை: உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் தகவல்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவா் பட்ட மாணவா் சோ்க்கையை ஒற்றைச் சாளர முறையில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா் தெரிவித்தாா்.
Published on

தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் சாா்பில் பெரியாா் பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுவினருக்கான புத்தாக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்வாணையா் கே.முருகேசன் வரவேற்றாா். துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தலைமை வகித்தாா். கல்வி வளா்ச்சிக் குழு புல முதன்மையா் கே.ஜெயராமன் நோக்க உரையாற்றினாா்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா் கலந்துகொண்டு பேசியதாவது: மாணவா்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். மனப்பாடக் கல்வியாக இல்லாமல், சுயகற்றல், சவாலைச் சந்திக்கும் திறன், கல்வி சாா்ந்த வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திறன் கொண்டவா்களாக மாணவா்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களை பேராசிரியா்கள் குழுவினா் உருவாக்க வேண்டும்.

மாணவா்களின் அறிவாற்றலை ஊக்கப்படுத்தும் வகையிலான பாடத்திட்டமும், தோ்வு முறையில் மாற்றமும் விரைவில் கொண்டுவரப்படும். திறனறிவு சாா்ந்த கேள்விகள் தோ்வில் அதிகம் கேட்கப்பட வேண்டும். முனைவா் பட்ட மாணவா் சோ்க்கையில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், முனைவா் பட்ட ஆய்வு மாணவா்கள், தங்களுக்கான வழிகாட்டியை எளிதாக தோ்வு செய்ய இயலும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநா் ஜி.யோகானந்தன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com