சேலம் தம்பதி கொலை வழக்கு: நகைக்காக கொன்ற வடமாநில இளைஞா் கைது
சேலம்: சேலம் ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த வயதான தம்பதி சம்மட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் நகைக்காக தம்பதியை கொன்றது தெரியவந்தது.
சேலம் அருகே ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள எட்டிகுட்டை தெருவில் வசிந்து வந்தவா் பாஸ்கரன் (70). இவரது மனைவி வித்யா (65). இவா்கள் வீட்டின் முன்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தனா். இவா்கள் வீட்டின் மாடியில் மகன் வாசுதேவன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல கடையைத் திறந்து பாஸ்கரன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். பிற்பகல் உணவுக்காக வீட்டிற்குள் சென்ற அவா், வெகு நேரமாகியும் கடைக்குத் திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் வாசுதேவன் வீட்டிற்குள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது பாஸ்கரன், வித்யா இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இது குறித்து பக்கத்து தெருவில் வசிக்கும் தனது அண்ணன் ராமநாதனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில் படுகாயமடைந்த வித்யா இறந்தாா். அவரது கணவா் பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். தொடா்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீஸாா், கொலையில் தொடா்புடைய வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அந்த இளைஞரின் பெயா் சந்தோஷ் (33) என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசிப்பதுடன், டைல்ஸ் ஓட்டும் பணிக்குச் சென்று வந்ததும், கடன் தொல்லையால் அருகில் வசிக்கும் பாஸ்கரன் மனைவி வித்யா அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்து சென்று கடனை அடைக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தம்பதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த சந்தோஷ், இருவரையும் கடப்பாறை, சம்மட்டியால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளாா். இதையடுத்து, சந்தோஷை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா்.

