ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

Published on

ஆத்தூா்: ஆத்தூா் அருகே தென்னங்குடிபாளையம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த பச்சமுத்து (70), தெற்கு காடு பகுதியைச் சோ்ந்த தமிழரசு (70). இருவரும் உறவினா்கள். இவா்கள் இருவரும் ஆத்தூா் தேசிய புறவழிச் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது தென்னங்குடிபாளையத்தில் சேலம் - சென்னை புறவழிச் சாலையைக் கடக்கும்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பச்சமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தமிழரசு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com