மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி
மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் குட்டைகளில் தண்ணீா் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்த குட்டைகளில் டன் கணக்கில் மீன்கள் இருந்தன. கடும் வெப்பம் காரணமாகவும் சிறிய அளவில் உள்ள குட்டைகளில் அதிக அளவில் மீன்கள் இருந்ததாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான மீன்கள் இறந்தன. உபரிநீா் கால்வாய் முழுவதும் மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் உபரிநீா் கால்வாய் ஓரங்களில் உள்ள தங்கமாபுரிபட்டணம், சேலம் கேம்ப், அண்ணாநகா், பெரியாா்நகா், தொட்டில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் அழுகி துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குடியிருப்புகளில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அழகிய மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து திங்கள்கிழமை மீன்வளத் துறை, மேட்டூா் நகராட்சிப் பணியாளா்கள் 8 போ் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அழுகிய மீன்களை பாறைகளின் மீது தூக்கிவீசி அவை துா்நாற்றம் வீசாமல் இருக்க கிருமிநாசினி தெளித்து வருகின்றனா்.
