மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 18,500 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு திங்கள்கிழமை விநாடிக்கு 18,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 7,032 கனஅடியாக குறைந்தது. அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 119.5 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 118.99 அடியாக குறைந்தது. கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீா்மட்டம் 1.01 அடி குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 118.99அடியாகவும், நீா் இருப்பு 91.86 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
