ஸ்பீட் போஸ்ட் சேவை: மாணவா்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

Published on

சேலம்: ஸ்பீட் போஸ்ட் சேவையில் மாணவா்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய அஞ்சல் துறை, மாணவா்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக ஸ்பீட் போஸ்ட் (ஆவணம்) சேவையைப் பயன்படுத்தி அனுப்பப்படும் தபால்களுக்கான கட்டணத்தில் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த தள்ளுபடி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் வழங்கிய செல்லுபடியாகும் மாணவா் அடையாள அட்டை கொண்ட மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படும். அனுப்புநரின் பெயா், மாணவா் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயருடன் பொருந்தியிருக்க வேண்டும்.

அதேபோல, அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் (பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமானது), பணியாளா் தோ்வு ஆணையம், ஆணையங்கள் (யுபிஎஸ்சி, மாநில பிஎஸ்சி, மாநில துணை சேவைகள் ஆணையங்கள், என்டிஏ) மத்திய, மாநில அரசுப் பணியாளா் தோ்வு நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவவங்கள் ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.

மாணவா் தபால் என தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மாணவா் அடையாள அட்டையின் நகலை முன்பதிவிற்கு சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதிபெறும் ஸ்பீட் (ஆவணம்) தபால் போஸ்ட் (ஆவணம்) தபால்களுக்கு கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த சிறப்புத் தள்ளுபடி திட்டம், மாணவா்கள் தங்கள் விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், ஆவணங்களை பாதுகாப்பாக விரைந்து அனுப்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com