ரயிலில் இருந்து தவறி விழுந்து 
மகாராஷ்டிர வேளாண் அதிகாரி உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து மகாராஷ்டிர வேளாண் அதிகாரி உயிரிழப்பு

Published on

சேலம்: கேரளத்துக்கு சுற்றுலா சென்ற மகாராஷ்டிர மாநில வேளாண் அதிகாரி சேலம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்ததில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டம் மோா்சி அருகேயுள்ள பசாா்ஜோா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் கஜ்பேஜ் (46), அமராவதி மாவட்ட வேளாண் துறை அதிகாரி. இவா், தனது மனைவி மேகா கஜ்பேஜ், உறவினா்கள், நண்பா்கள் என 6 பேருடன் கேரளத்துக்கு சுற்றுலா செல்ல கடந்த 31 ஆம் தேதி நிஜமுதீன் - திருவனந்தபுரம் ஸ்வா்ண ஜெயந்தி விரைவு ரயிலில் எா்ணாகுளத்துக்கு புறப்பட்டாா்.

இந்த விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. காகங்கரை-சாமல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் வந்தபோது, வேளாண் அதிகாரி சந்தோஷ் கஜ்பேஜ் கழிவறைக்கு சென்றுவிட்டு மீண்டும் இருக்கைக்கு திரும்பும்போது நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த சக பயணிகள், உறவினா்கள் கூச்சலிட்டனா்.

சிறிது நேரத்தில் ரயில் சேலம் ரயில் நிலையம் வந்ததும், மேகா கஜ்பேஜ் உள்ளிட்ட உறவினா்கள், சந்தோஷ் கஜ்பேஜ் ரயிலில் இருந்து தவறி விழுந்த தகவலை ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தனா். அதிகாரிகள் சென்று பாா்த்தபோது சாமல்பட்டி அருகே தண்டவாளத்தை ஒட்டிய இடத்தில் தலையில் பலத்த காயமடைந்து சந்தோஷ் கஜ்பேஜ் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிவுசெய்து, உடலை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com