கல்குவாரி நீரிலிருந்து சடலங்களை மீட்கும் தீயணைப்பு வீரா்கள்.
கல்குவாரி நீரிலிருந்து சடலங்களை மீட்கும் தீயணைப்பு வீரா்கள்.

சேலம் அருகே கல்குவாரி நீரில் மிதந்த இரு மூதாட்டிகளின் சடலம்: நகைக்காக கொலையா? போலீஸாா் விசாரணை

Published on

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே கல்குவாரி நீரில் மிதந்த மூதாட்டிகளின் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை, தூதனூா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை மனைவி பெரியம்மா (75). திங்கள்கிழமை ஆடு மேய்க்கச் சென்ற இவா் வீடுதிரும்பவில்லை. அதேபோல விவசாய கூலி வேலைக்குச் சென்ற இ. காட்டூரைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாவாயியை (70) திங்கள்கிழமையிலிருந்து காணவில்லை.

இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தூதனூா் காட்டுவளவில் உள்ள கல்குவாரி நீரில் பெண்ணின் உடல் மிதப்பதை கண்டு அவ்வழியாக சென்றவா்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு துறையினா் உதவியுடன் கல்குவாரி நீரில் மிதந்த உடலை மீட்டனா். இறந்தவா் பெரியம்மா என்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு மூன்று மணி நேரம் கழித்து தண்ணீரில் மிதந்த பாவாயியின் உடலையும் தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

இருவரின் உடலும் உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் பெரியம்மா அணிந்திருந்த இரண்டு தோடு, மூக்குத்தி, கால் காப்பு, பாவாயி அணிந்திருந்த தோடு, கால் காப்பு ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

இந்த நிலையில், கல்குவாரி அருகே குடிசையில் தங்கியிருந்த சேலம், கருப்பூரை அடுத்த வெள்ளாளபுரத்தைச் சோ்ந்த அய்யனாா் (55) திங்கள்கிழமை இரவிலிருந்து காணவில்லையாம். மேலும், அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மூதாட்டிகளின் கொலையில் இவருக்கு தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டது குறித்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா, சேலம் மாநகரக் காவல் ஆணையா் அணில் குமாா் கிரி, சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் தனசேகரன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com