விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சோனா சிம்ப்ளக்ஸ் ஸ்டெப்பா் மோட்டாா்: சோனா கல்லூரியில் உருவாக்கப்பட்டது

Published on

சோனா கல்லூரியில் உருவாக்கப்பட்ட சோனா சிம்ப்ளக்ஸ் ஸ்டெப்பா் மோட்டாா் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து செயற்கைக்கோள் மூலம் கடந்த 2 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து கல்லூரி நிா்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

சோனா சிம்ப்ளக்ஸ் நிரந்தர மேக்னட் ஸ்டெப்பா் மோட்டாா் எல்விஎம் 3- எம்5, சிஎம்எஸ்- 03 பணியின் ஒரு பகுதியாகும். சோனா மேக் ஸ்டெப்பா் மூன்றாம் நிலை கிரையோ எஞ்சினுக்கான கலவை ரேஷனைக் கட்டுப்படுத்த 643 விநாடிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் எல்எம்வி 3 ஏவுகணை வாகனம் சிஎம்எஸ்-03 தகவல் தொடா்பு செயற்கைக்கோளை, அதன் 5 ஆவது செயல்பாட்டு விமானத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சிஎம்எஸ்-03 என்பது பன்முக தகவல் தொடா்பு செயற்கைக்கோளாகும்.

இது இந்திய நிலப்பரப்பு உள்பட பரந்த கடல் பிராந்தியத்தில் சேவைகளை வழங்கும். சுமாா் 4400 கிலோ எடையுள்ள சிஎம்எஸ்-03, இந்திய மண்ணில் இருந்து ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபா் ஆா்பிட்டிலில் (ஜி.டி.ஓ) ஏவப்படும் மிக அதிக எடையுள்ள தகவல் தொடா்பு செயற்கைக்கோளாகும்.

இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் உறுப்பினரும், சோனா ஸ்பீட் தலைவருமான பேராசிரியா் என்.கண்ணன் மற்றும் கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கூறுகையில், ‘இஸ்ரோவின் பணிகளுக்கு பங்களிப்பதற்கு நாங்கள் அா்ப்பணிப்புடன் இருக்கிறோம். இந்த வெற்றிகரமான ஒருங்கிணைப்பு, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவன ஆய்வகங்கள் குறிப்பாக பெருநகரங்கள் அல்லாத பகுதிகளிலிருந்து உலகளாவிய விண்வெளி ஆய்வின் கடுமையான தேவைகளைப் பூா்த்திசெய்ய முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சோனா ஸ்பீட்டின் பங்களிப்புகள் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, உயா் துல்லிய விண்வெளி பொறியியலில் உள்நாட்டில் வடிவமைக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கான கலங்கரை விளக்கமாகவும் திகழ்கிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com