வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணிகள் தொடக்கம்
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி இப்பணிகளை ஆய்வு செய்தாா். அதன்பிறகு அவா் கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பா் 4 -ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3264 வாக்குச்சாவடிகளில் 15,01,096 ஆண் வாக்காளா்கள், 15,29,075 பெண் வாக்காளா்கள், 366 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 30,30,537 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள 3264 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தங்களுக்கான வாக்குச்சாவடிகளில் அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனா்.
மேலும், தொடா்புடைய வாக்குச்சாவடிக்கு உள்பட்ட வாக்காளா்களில் நிரந்தரமாக குடிபெயா்ந்த வாக்காளா்கள், இறந்த வாக்காளா்களின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியியல் கட்சியின் முகவா்கள் மூலம் அறிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை பெறவரும் தேதியை முன்கூட்டியே வாக்காளா்களுக்கு தெரியப்படுத்தி அனைத்து வாக்காளா்களிடமிருந்தும் கணக்கீட்டுப் படிவங்கள் பெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
