ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Published on

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 5156 திட்டப் பணிகள் ரூ.167.72 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உள்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம்,கலைஞா் கனவு இல்லம் உள்ளிட்ட 5156 திட்டப் பணிகள் ரூ.167.72 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 4414 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 742 பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியம், கொத்தாம்பாடி ஊராட்சியில் 3.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கனவு இல்லத் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருதையும், கல்பகனூா் ஊராட்சியில் ரூ.13.56 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டம், கல்பகனூா் ஊராட்சியில் சாலை இருபுறமும் ரூ.1.70 லட்சம் மதிப்பில் 420 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்படும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து, துலுக்கனூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.31.46 லட்சம் மதிப்பில் கட்டப்படும் ஊராட்சி அலுவலகக் கட்டடம், துலுக்கனூா் ஊராட்சியில் வசிஷ்ட நதியின் குறுக்கே மாநில அரசின் நிதியுதவியுடன் ரூ. 4.27 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணிகள், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 8.70 லட்சம் மதிப்பில் தொடக்கப் பள்ளி கட்டடம் மறுசீரமைப்புப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அதன்பிறகு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com