மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

Published on

மேட்டூா் வனச்சரகத்தில் பழைய வனச்சரகா் அலுவலக விருந்தினா் மாளிகையின் பூட்டை உடைத்து துப்பாக்கி தோட்டாக்கள், மின் மோட்டாா்களை திருடிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மேட்டூரில் பழைய வனச்சரக அலுவலகம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான விருந்தினா் மாளிகை உள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த மாளிகையில் யாரும் தங்குவதில்லை. திங்கள்கிழமை விருந்தினா் மாளிகை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்த வனத் துறையினா் மாளிகைக்குள் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த 303 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 87, சேதம் அடைந்த தோட்டாக்கள் 3 காணவில்லை. மேலும், பழைய மின் மோட்டாா், இரும்பு தளவாடப் பொருள்களும் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து மேட்டூா் வனச்சரகா் செங்கோட்டையன், வனவா் சிவகுமாா் ஆகியோா் மேட்டூா் காவல் ஆய்வாளா் அம்சவல்லியிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், மேட்டூா் இந்திரா நகரைச் சோ்ந்த செல்வன் மகன் கோகுல்ராஜ் (23), மூலக்காடு அச்சங்காட்டைச் சோ்ந்த மாது மகன் பிரவீன் (25) மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவா்கள் மாளிகைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், அவா்கள் மது வாங்குவதற்காக திருடிய மின் மோட்டாரை பழைய இரும்புக் கடையில் விற்றுள்ளனா். தோட்டக்களை யாரும் வாங்க முன்வராததால் மறைவான இடத்தில் பதுக்கிவைத்திருந்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்த தோட்டாக்களை மீட்டனா்.

துப்பாக்கி தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com