மூதாட்டிகள் கொலை வழக்கில் 3 தனிப்படைகள் அமைப்பு
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கல்குவாரி நீரில் இரண்டு மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் திங்கள்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த பெரியம்மா (75), பாவாயியின் (70) சடலங்கள் மீட்கப்பட்டன. அவா்கள் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்பி (பொ) விமலா உத்தரவின்பேரில் சேலம் காவல் துணை கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடிவருகின்றனா். மேலும், இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
