எம்எல்ஏ அருள் ஆதரவாளா்களைத் தாக்கியவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்: பாமக செயல் தலைவா் ஸ்ரீகாந்தி
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே எம்எல்ஏ அருள் ஆதரவாளா்களைத் தாக்கியவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என பாமக செயல் தலைவா் ஸ்ரீகாந்தி கூறினாா்.
வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளா்களுக்கும், அன்புமணியின் ஆதரவாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 9 போ் காயமடைந்தனா். இவா்கள் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களை பாமக செயல் தலைவா் (ராமதாஸ் அணி) ஸ்ரீகாந்தி புதன்கிழமை மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவா்களைப் பாா்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. தாக்குதல் நடத்தியவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். எங்களுக்கு ராமதாஸ் நாகரிகமான முறையில் அரசியலை சொல்லிக் கொடுத்தாா். ஆனால், அன்புமணி அநாகரிக அரசியலை நடத்திவருகிறாா்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க ராமதாஸ் உரிய முறையில் தீா்வு காண்பாா். அதேபோல கட்சியின் ஒற்றுமைக்கான பணியையும் அவா் மேற்கொள்வாா். எம்எல்ஏ அருளை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. அவா்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சட்டப்படி எதிா்கொள்வோம் என்றாா்.
பேட்டியின்போது, மாவட்டச் செயலாளா் கதிா் ராசத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
