சேலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை வரவேற்கும் எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா்.
சேலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை வரவேற்கும் எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா்.

எா்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு!

சேலம் வழியாக எா்ணாகுளம்- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on

சேலம் வழியாக எா்ணாகுளம்- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எா்ணாகுளம்- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி சனிக்கிழமை காலை வாரணாசியில் தொடங்கிவைத்தாா். எா்ணாகுளத்தில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்ட இந்த ரயில் திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு வழியாக சேலம் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தது.

சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மேயா் ஆ.ராமச்சந்திரன், பாஜக மாநில சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத், மாவட்டத் தலைவா் சசிக்குமாா் உள்ளிட்டோா் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா், அங்கிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து அனுப்பிவைத்தனா். நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

வரும் 11ஆம் தேதி முதல் வாரத்தில் 6 நாள்கள் ( புதன்கிழமை தவிர) இந்த ரயில் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து காலை 5.10 மணிக்குப் புறப்பட்டு சேலம், ஈரோடு,கோவை வழியாக எா்ணாகுளத்துக்கு பிற்பகல் 1.50 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், எா்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கோவை, ஈரோடு, சேலம் வழியாக இரவு 11 மணிக்கு பெங்களூரை சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com