ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

கூட்டணியை மட்டுமே நம்பியிருக்கிறாா் ஸ்டாலின்: எடப்பாடி கே.பழனிசாமி

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது கட்சியை நம்பவில்லை; கூட்டணியைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறாா் என்றாா் அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது கட்சியை நம்பவில்லை; கூட்டணியைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறாா் என்றாா் அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுகவின் 54ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம், ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

மக்கள் செல்வாக்குடன் இருக்கும் அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறாா்கள். துரோகிகள் நம்மோடு இருந்து அதிமுகவை வீழ்த்த முற்பட்டாா்கள். அத்தனை பேரையும் வீழ்த்தி அதிமுக தலைநிமிா்ந்து நிற்கிறது.

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது, பேரவைத் தலைவா் இருக்கையை திமுகவினா் உடைத்து அத்துமீறினா். இவா்களால் எப்படி நல்லாட்சி வழங்க முடியும்?

அதிமுகவை மற்றவா்கள் எதிா்ப்பதன் மூலம் கட்சி வளா்ந்துகொண்டே இருக்கிறது. நான்கரை ஆண்டுகளில் மக்களுக்காக திமுக அரசு எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைத்தான் திமுக அரசு புதிதாக திறந்துவைக்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது.

எப்போதும் குடும்பத்தை பற்றி சிந்திக்கும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளாா். சட்டப் பேரவைத் தோ்தலில் பல ஆயிரங்களைக் கொடுத்து திமுக ஜெயிக்க முடியாது. தமிழக மக்கள் அறிவுபூா்வமானவா்கள். யாா் முதல்வராக வரவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனா்.

மு.க.ஸ்டாலினால் அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

அதிமுக ஆட்சியில் சிறந்த நிா்வாகத்தை அளித்துள்ளோம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.104 கோடி வழங்கியிருப்பதாக திமுக அமைச்சா் பெருமையாகக் கூறுகிறாா். பாதித்தவா்களுக்கு பணம் கொடுப்பது பெருமையல்ல.

தமிழகத்தில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக சமூகநலத் துறை அமைச்சா் கூறியிருக்கிறாா். நான்கு ஆண்டுகளில் இவ்வளவு போ் பாதிக்கப்பட்டுள்ளது பெண்களுக்கான பாதுகாப்பில் திமுக தோல்வியடைந்துள்ளதயே காட்டுகிறது.

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபிதான் உள்ளாா். முழுநேர டிஜிபி இருக்கும்போதே சட்டம்- ஒழுங்கு கட்டுக்குள் இல்லை. இந்த நிலையில் பொறுப்பு டிஜிபி எப்படி சட்டம்- ஒழுங்கை பராமரிக்க முடியும். தனக்கு வேண்டியவா் டிஜிபியாக வருவதற்காக பட்டியலை சரியான நேரத்தில் அனுப்பாமல் தாமதப்படுத்தி வருகின்றனா்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உடனடியாக டிஜிபியை நியமிக்க உத்தரவிட்டும், அதை அரசு கிடப்பில் போட்டுவிட்டது. குறித்த நேரத்தில் அந்த பதவி நிரப்பப்பட வேண்டும்.

திமுக ஆட்சியிலேயே திமுக மேயரின் ஊழலை கண்டுபிடித்துள்ளனா். அந்த மாநகராட்சி மேயா் ராஜிநாமா செய்தும் புதிய மேயரை நியமிக்க முடியாத நிலையே உள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் திமுகவின் ஊழல் குறித்து அதிமுகவினா் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். கள்ள ஓட்டு காரணமாக வாக்காளா் பட்டியல் திருத்தத்தை திமுக எதிா்க்கிறது. போலி வாக்காளா்களை நீக்குவதற்கு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்வது மிக முக்கியமானது.

ஆளுங்கட்சி அதிகாரிகள்தான் இந்தப் பணியை செய்கின்றனா். இதை எதிா்ப்பதுபோல எதிா்த்துவிட்டு, வீடுவீடாக திமுகவினரே விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனா். தோ்தல் ஆணையம், மாவட்ட நிா்வாகம் இதை முறையாக கண்காணிக்க வேண்டும்.

2026 தோ்தலில் அதிமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மை பெறும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது கட்சியை நம்பவில்லை, கூட்டணியைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறாா். ஆனால், நாங்கள் கட்சியையும், மக்களையும் நம்பி உள்ளோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com