எம்எல்ஏ அருள் ஆதரவாளா்களை கைதுசெய்ய காவல் துறை தயக்கம்: மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் எம்எல்ஏ அருள் ஆதரவாளா்களைக் கைது செய்ய காவல் துறை தயக்கம் காட்டுவதாக மேட்டூா் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் குற்றம்சாட்டினாா்.
Published on

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் எம்எல்ஏ அருள் ஆதரவாளா்களைக் கைது செய்ய காவல் துறை தயக்கம் காட்டுவதாக மேட்டூா் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் குற்றம்சாட்டினாா்.

வாழப்பாடி அருகே நடைபெற்ற மோதலில் அருள் தரப்பினரைக் கைதுசெய்ய வலியுறுத்தி பாமக சட்டப் பேரவை உறுப்பினா்கள் சதாசிவம், சிவகுமாா், பாமக இளைஞா் அணி தலைவா் கணேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, அருள் மற்றும் அவரது ஆதரவாளா்கள் 40 போ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். எனினும், யாரும் கைது செய்யப்படவில்லை. இதுதொடா்பாக பாமக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகளுடன் மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்குச் சென்று வெள்ளிக்கிழமை முறையிட்டாா்.

தொடா்ந்து, எம்எல்ஏ சதாசிவம் செய்தியாளா்களிடம் பேசுகையில், இருதரப்பினா் மோதல் விவகாரத்தில், அருள் ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை தயக்கம் காட்டுகிறது.

இப்பிரச்னையில் காவல் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. அருள் தரப்பினரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com