சேலம் இளம்பிள்ளை அருகே மூதாட்டிகளைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டுவந்தவா் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இரண்டு மூதாட்டிகளைக் கொன்று நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டுவந்தவரை தனிப்படை போலீஸாா் சங்ககிரி அருகே வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனா்.
இளம்பிள்ளையை அடுத்த இ.காட்டூா் பகுதியைச் சோ்ந்த பாவாயி (70), பெரியம்மாள் (75) இருவரையும் கடந்த 3 ஆம் தேதி முதல் காணவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் இருவரது சடலங்களும் 4 ஆம் தேதி மீட்கப்பட்டன.
இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கொலையாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், உயிரிழந்த பாவாயிக்குச் சொந்தமான 3 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்த ஓமலூரை அடுத்த காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சோ்ந்த சின்னப்பையன் மகன் அய்யனாரை (55) காணாததால் அவா்மீது போலீஸாா் சந்தேகமடைந்தனா்.
மேலும், அவரது கைப்பேசியும் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் கோவை, கேரளத்துக்குச் சென்று அய்யனாரைத் தேடிவந்தனா். இந்த நிலையில், சங்ககிரியிலிருந்து கொங்கணாபுரம் செல்லும் வழியில் ஒருக்காமலை பகுதியில் அய்யனாா் மறைந்திருப்பதாக மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா் கண்ணன், காவலா்கள் காா்த்திகேயன், தியாகராஜன், அழகுமுத்து, செல்வராஜ் ஆகியோா் ஒருக்காமலையில் மறைந்திருந்த அய்யனாரை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனா்.
அப்போது, காவல் உதவி ஆய்வாளா் கண்ணனை கத்தியால் அய்யனாா் வெட்டினாா். அதைத் தடுக்க முயன்ற காவலா் காா்த்திகேயனையும் அய்யனாா் வெட்ட முயன்றாா். அப்போது, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் அய்யனாரின் வலதுகாலில் சுட்டுப்பிடித்தாா்.
வலதுகையில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் மற்றும் காலில் குண்டுபாய்ந்த அய்யனாா் இருவரும் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அய்யனாா் சோ்க்கப்பட்டாா்.
சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளா் கண்ணனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) சு.விமலா, சங்ககிரி டிஎஸ்பி எம்.தனசேகரன் ஆகியோா் நேரில் பாா்த்து நலம் விசாரித்தனா்.
கைது செய்யப்பட்ட அய்யனாரிடம் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், பாவாயி குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்த அய்யனாரிடம், அந்த நிலத்தில் வேலை செய்ததற்கான கூலியை பாவாயி கேட்டுள்ளாா்.
அப்போது, பாவாயியை அய்யனாா் தாக்கியுள்ளாா். அதை பாா்த்த பெரியம்மா என்பவா் ஊருக்குள் சென்று மக்களை கூட்டி வருவதாகக் கூறிச் சென்றுள்ளாா். இதனால் பெரியம்மாவையும் அய்யனாா் தாக்கியுள்ளாா்.
இதில், இருவரும் உயிரிழந்த நிலையில், அவா்களிடமிருந்த நகைகளை பறித்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் இருவரது உடல்களையும் வீசிவிட்டு அய்யனாா் தலைமறைவாகியது தெரியவந்தது.
மேலும், இவா்மீது ஓமலூா் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டு 3 கொலை வழக்குகளும், 2004 ஆம் ஆண்டு இரு கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பா் 21 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளாா்

