சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற நாகா்கோவில் விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனா். அதன்படி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அய்யாதுரை தலைமையிலான தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை சேலம் வழியாக சென்ற ரயில்களில் சோதனை நடத்தினா்.
சாலிமா்-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் பின்பக்க முன்பதிவில்லா பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த 2 பைகளைக் கைப்பற்றினா். அதில் 9 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சாவை ரயில்வே போலீஸாரிடம் தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
