திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கெங்கவல்லியை அடுத்த தெடாவூரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மகள் புவனேஸ்வரிக்கும் ( 17) அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முத்துக்குமாருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், முத்துக்குமாரின் சகோதரி சத்யா, தனது தம்பியையும், அவரது மனைவியையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தாா்.
அப்போது, நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சத்யா, வீட்டை கதவை உடைத்து உள்ளே சென்றாா். அப்போது, புவனேஸ்வரி சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினரின் புவனேஸ்வரியை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து, போலீஸாா் புவனேஸ்வரியின் உடலை உடற்கூறாய்வுக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், புவனேஸ்வரி ஏற்கெனவே ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரது பெற்றோா் தங்கள் சமூகத்தைச் சோ்ந்த முத்துக்குமாருக்கு அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளனா். இதனால் கடந்த 4 மாதங்களாக புவனேஸ்வரி விரக்தியில் இருந்ததும் தெரியவந்தது.
