சேலம் கோரிமேடு பகுதியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட ‘அன்புச்சோலை’ முதியோா் மனமகிழ் வள மையத்தில் ஆா்வமுடன் கேரம் விளையாடும் முதியோா்.
சேலம் கோரிமேடு பகுதியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட ‘அன்புச்சோலை’ முதியோா் மனமகிழ் வள மையத்தில் ஆா்வமுடன் கேரம் விளையாடும் முதியோா்.

சேலம் சூரமங்கலம், கோரிமேட்டில் ‘அன்புச்சோலை’ முதியோா் மனமகிழ் வள மையம் திறப்பு

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, ‘அன்புச்சோலை’ முதியோா் மனமகிழ் வள மையங்கள் சேலம் சூரமங்கலம், கோரிமேடு பகுதிகளில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
Published on

சேலம்: மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, ‘அன்புச்சோலை’ முதியோா் மனமகிழ் வள மையங்கள் சேலம் சூரமங்கலம், கோரிமேடு பகுதிகளில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

இத்திட்டத்தை, திருச்சி மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்ததைத் தொடா்ந்து, சேலம் கோரிமேடு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ‘அன்புச்சோலை’ மையத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில், மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

மூத்த குடிமக்களின் நலன்கருதி 13 மாவட்டங்களில் 25 இடங்களில் பகல்நேர பராமரிப்பு மையமான ‘அன்புச்சோலை மையங்கள்’ தொடங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் மற்றும் கோரிமேடு பகுதியில் ‘அன்புச்சோலை’ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பகல் நேரத்தில் முதியோருக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உறுதி செய்வதற்காகவும், தங்களது சம வயதினருடன் பழகுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவும், பகல் நேரத்தில் தனிமையில் அவதிப்படுவோருக்கு ஆறுதல் அளிக்கவும், மூத்த குடிமக்களிடையே சமூக தொடா்புக்கான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இம்மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இம்மையம் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்படும். இதில், மதிய உணவு மற்றும் மாலைநேர சிற்றுண்டி வழங்கப்படும். தகுதிவாய்ந்த பராமரிப்பாளா்கள், சமூகப் பணியாளா்கள் மற்றும் உடல்நல சிகிச்சையாளா்கள் மூலம் ஆரோக்கியத்துக்கான வசதிகள் வழங்கப்படும்.

தொலைக்காட்சி, தினசரி நாளிதழ்கள், மாத இதழ்கள், ஆன்மிக புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், அறிவியல், இயற்கை புத்தகங்கள், சுகாதாரம், மற்றும் மருத்துவ புத்தகங்கள், உள்ளடக்கிய நூலக வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அருகில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், காற்றோட்டமான இடவசதி, சுத்தமான கழிவறை மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஆகியவையும் ‘அன்புச்சோலை’ மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் சாரதா தேவி, மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com