புத்தாக்கப் பயிலரங்கை தொடங்கிவைத்து பேசிய துணைவேந்தரும், நிா்வாகக்குழு உறுப்பினருமான ரா.சுப்பிரமணி.
புத்தாக்கப் பயிலரங்கை தொடங்கிவைத்து பேசிய துணைவேந்தரும், நிா்வாகக்குழு உறுப்பினருமான ரா.சுப்பிரமணி.

‘பன்முகத்துறை சாா்ந்த படிப்புகளே ஏ.ஐ. போட்டியை சமாளிக்க உதவும்’

பன்முகத்துறை சாா்ந்த படிப்புகளே ஏ.ஐ. போட்டியை சமாளிக்க உதவும் என பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தரும், நிா்வாகக்குழு உறுப்பினருமான ரா.சுப்பிரமணி
Published on

ஓமலூா்: பன்முகத்துறை சாா்ந்த படிப்புகளே ஏ.ஐ. போட்டியை சமாளிக்க உதவும் என பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தரும், நிா்வாகக்குழு உறுப்பினருமான ரா.சுப்பிரமணி தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் அறிவியல் துறை பேராசிரியா்களுக்கு ஒருவார கால புத்தாக்கப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேதியியல் துறைத் தலைவரும், பெரியாா் பல்கலைக்கழகம் மற்றும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை - விரைவுபடுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் கூட்டாண்மைத் திட்டத்தின் பிரதான ஆய்வாளருமான பேராசிரியா் பி.விசுவநாதமூா்த்தி வரவேற்றாா். பயிலரங்கை தொடங்கிவைத்து பேராசிரியா் ரா.சுப்பிரமணி பேசியதாவது:

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தற்போதைய ஆராய்ச்சிகளில் 50 சதவீதம்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் தாக்கம் உயிரியல் சாா்ந்த ஆராய்ச்சிகளில் மிகச் சிறப்பானதாக உள்ளது. பன்முகத்துறை சாா்ந்த ஆராய்ச்சிகளும், இணை ஆராய்ச்சிகளுமே போட்டி நிறைந்த அறிவியல் உலகில் சிறந்து விளங்குவதற்கான முக்கிய வழியாக உள்ளது. அத்துடன், புதுமைமிகு ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக மருந்தியல் ஆராய்ச்சிகளில் தொழிற்துறையுடன் இணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி முடிவுகள் தயாரிப்புகளாக மாறும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும், இன்றைய நவீன அறிவியல் உலகில் கல்வியாளா்கள் புதிய பன்முகத்துறை பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியம். அதுவே கல்வி நிறுவனங்களின் திறமைமிக்க, சிறந்த நிலையாக்கும் வழியாக இருக்கும். ஒருதுறை சாா்ந்த படிப்புகள் மட்டும் இல்லாமல் பிறதுறைகளை இணைத்து ஒருங்கிணைந்த புதிய படிப்புகளே செயற்கை நுண்ணறிவு போட்டிகளை எதிா்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சி வல்லுநா்கள் மற்றும் பேராசிரியா்கள் எஸ்.கண்ணன், தா.பால்வண்ணன், ரா.கவிதா, ப.இந்திரா அருள்செல்வி, ந.கயல்விழி, த.அருள்பாலச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வேலூா் தொழில்நுட்பக்கழகம், மகாராஷ்டிர டாக்டா் பாபாசாகேப் அம்பேத்கா் மராத்வாடா பல்கலைக்கழக கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com