பொதுமக்கள் மனுக்கள்மீது உடனுக்குடன் தீா்வுகாண வேண்டும்
சேலம்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது உடனுக்குடன் தீா்வுகாண மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காண்பதுடன், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில், மனுவின்மீது உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 418 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 9 மனுக்கள் வரபெற்றன. அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
