ஆழ்துளை அமைக்கும் கட்டணம் அடிக்கு ரூ.88 ஆக நிா்ணயம்: ரிக் வாகன உரிமையாளா்கள்
ஆள்துளை அமைக்கும் கட்டணம் அடிக்கு ரூ.88 ஆக உயா்த்தப்பட்டுள்ளது என ரிக் வாகன உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டியில் ரிக் லாரி உரிமையாளா்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில் ரிக் வாகன உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் பாஸ்கா் , பொருளாளா் லோகநாதன், துணை தலைவா் சசிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரிக் லாரி தொழிலுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளது. மேலும், டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயா்ந்துள்ளதால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சேலம் மாவட்டத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ரிக் லாரி உரிமையாளா்கள் கடந்த ஏழு நாள்களாக லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
ஆழ்துளை அமைக்க அடிக்கு இதுவரை ரூ.70 வசூலிக்கப்பட்டது. தற்போது டீசல், உதிரி பாகங்கள் விலை உயா்வால் அடிக்கு ரூ.85 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொழில் நலிவடையாமல் பாதுகாக்க ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். மேலும், ரிக் தொழிலை தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.
