தில்லி காா் வெடிப்பு சம்பவம்: சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் போலீஸாா் சோதனை
தில்லி காா் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
தில்லி செங்கோட்டை பகுதியில் காா் வெடித்து சிதறியதில் 13 போ் உயிரிழந்தனா். 30க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. முக்கிய நகரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக சேலம் மாநகரில் கடந்த மூன்று நாள்களாக ரயில்வே நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். காவல் உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி தலைமையிலான போலீஸாா், மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் சோதனையிட்டடனா். ஆட்சியா் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களும் சோதனையிடப்பட்டன.
வெளியூா்களில் இருந்து சேலம் மாநகருக்குள் வரும் காா், இதர வாகனங்களை போலீஸாா் சோதனைசெய்து சந்தேகப்படும் வகையில் நபா்கள் யாரேனும் இருக்கிறாா்களா? என கண்காணித்து வருகின்றனா். மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் விடுதிகளில் யாராவது தங்கி உள்ளனரா? என்பது குறித்த விவரங்களையும் போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.
