சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், டி.எம்.செல்வகணபதி எம்.பி.
சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், டி.எம்.செல்வகணபதி எம்.பி.

பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

சேலம் சிறுமலா் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் மாணவா்களுக்கு மிதிவண்டி
Published on

சேலம்: சேலம் சிறுமலா் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் 87,209 குழந்தைகளும், புதுமைப்பெண் திட்டத்தில் 33,419 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 17,760 மாணவா்களும், நான் முதல்வன் திட்டத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை உள்ள 1,34,361 மாணவ, மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனா்.

இதுதவிர, பள்ளி செல்லா பிள்ளைகளைக் கண்டறிய செயலி, உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்றுநோக்கு செயலி, இளந்தளிா் இலக்கியத் திட்டம், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள், ஸ்மாா்ட் வகுப்பறைகள் என பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடப்பாண்டுக்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வி ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவா்களுக்கும், 55,123 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,06,181 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 11,317 மாணவா்களுக்கும், 13,842 மாணவிகளுக்கும் என மொத்தம் 25,159 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்க உள்ளன என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் கல்வி அலுவலா்கள் நரசிம்மன், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com