கேரளத்தில் பரவும் அமீபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
கேரள மாநிலத்தில் பரவும் அமீபா வைரஸ் குறித்து சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: மூளையை தாக்கும் அமீபா வைரஸ் தொற்றுநோய் அல்ல. நீண்ட நாள்கள் தேங்கியுள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிப்பதால் அந்த நீரில் தேங்கியுள்ள வைரஸ் மனிதனின் மூக்கின் வழியாக மூளையை பாதிப்படையச் செய்வதால் இறப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நாள்கள் தேங்கியுள்ள நீரில் குளிப்பதால் மட்டுமே இதுபோன்ற பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ஓடும் நீரில் குளிப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. எனவே, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.
கேரளம் மட்டுமல்ல தமிழகத்தில்கூட நீண்ட நாள்களாக தேங்கியிருக்கும் குளம், குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் குளிப்பதை தவிா்க்க வேண்டும் என்றாா்.
