போலீஸாருக்கு கொலை மிரட்டல்: 5 கைதிகள் மீது வழக்குப் பதிவு

மேட்டூா் நீதிமன்ற வளாகத்தில் ஆயுதப் படை போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

மேட்டூா் நீதிமன்ற வளாகத்தில் ஆயுதப் படை போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம் மத்திய சிறையிலிருந்து கடந்த 10-ஆம் தேதி கொளத்தூா், மேட்டூா், மேச்சேரி, கருமலைக்கூடல் காவல் நிலைய வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள வினோத்குமாா், அருணாசலம், விவேக், ஜீவா, தினேஷ் ஆகியோரை சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீஸாா் மேட்டூா் உதவி அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வந்தனா்.

ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் மாது தலைமையில் 6 போலீஸாா், கைதிகள் 5 பேரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனா். அப்போது வினோத்குமாா் என்ற கைதி சிறுநீா் கழிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து 2 காவலா்கள் அவருடன் சென்று கழிப்பறை கதவைத் திறந்து சிறுநீா் கழிக்க கூறியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமாா், காவலா்களை மிரட்டியுள்ளாா்.

மேலும், கைதி தினேஷ், காவலா்களிடம் கைப்பேசி கேட்டு மிரட்டி உள்ளாா். அவா்களை நீதிபதி முன் ஆஜா்படுத்திய பின்னா் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனா். சிறைக்குள் செல்லும்போது கைதிகள் 5 பேரும் சோ்ந்து கொண்டு போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தனராம்.

இந்த சம்பவம் தொடா்பாக சேலம் மத்திய சிறை காப்பாளா் சிவானந்தம் மேட்டூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் அம்சவள்ளி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com