எடப்பாடியில் 31 சவரன் நகை, பணம் திருட்டு
எடப்பாடியில் பகலில் அரசுப் பள்ளி ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட அங்காளம்மன் கோயில் தெரு, பழைய தபால் நிலையம் அருகே வசித்து வருபவா் செந்தில் குமரவேல் (58), அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி ஜூலி செட்டிமாங்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கமாக இவா்களிருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனா். பகல்நேரத்தில் ஆசிரியா் செந்தில் குமரவேல் மகளுடன் வீடுதிரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த எடப்பாடி போலீஸாா், அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
