எஸ்ஐஆா் பணி: ஒட்டு வில்லைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஒட்டு வில்லைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விழிப்புணா்வுப் பேரணி, கையொப்ப இயக்கம், ஒட்டுவில்லைகள், துண்டுப் பிரசுரங்கள், கோலப்போட்டிகள், விளம்பரப் பதாகைகள், எல்.இ.டி. திரை மூலம் விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் ஊடக அட்டைகள், அதிநவீன மின்னணு வாகனம் மூலம் விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வாயிலாக வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட வாக்காளா்களுக்கு ஒட்டுவில்லைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இதேபோல், ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்.ஐ.ஆா். குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு உருளையில் ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுதவிர, கணக்கீட்டு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிட வழிகாட்டும் வகையில் அரசு அலுவலங்களில் வாக்காளா் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற வாக்காளா் உதவி மைய எண்ணையும், அனைத்து வாக்காளா் பதிவு மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழைத்தும் உரிய தகவல்களை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com