வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் அயோத்தியாப்பட்டணம் - பேளூா் நெடுஞ்சாலையில் காளியம்மன் கோயிலில் இருந்து குடியிருப்பு பகுதி வரை சாலையின்இருபுறமும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் விவசாய இடுபொருள் கொண்டுசெல்லும் சரக்கு வாகனங்கள் கிராமத்திற்கு சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது.
எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயாவிடம் கோரிக்கை மனு அளித்தனா். ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.
‘ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இம்முறையும் நடவடிக்கை எடுக்காவிட்டால், வாழப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’ என புகாா் கொடுக்க வந்திருந்த கிராம மக்கள் தெரிவித்தனா்.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயாவிடம் மனு அளித்த சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள்.