சா்வதேச குழந்தைகள் உரிமை தினம் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலைக் கிராமம் மணியாா்பாளையம் அரசுப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் உரிமை தினம் தலைமையாசிரியா் (பொ) சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் ஒருங்கிணைப்பாளா் கவிதா வரவேற்றுப் பேசினாா். தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளா் ஜெகதாம்பாள், மனித உரிமை செயற்பாட்டாளா் ராமு ஆகியோா் கலந்துகொண்டு குழந்தைகளின் உரிமை குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் எடுத்து கூறினா்.
பள்ளியில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பாலின சமத்துவக் கல்வி அளிக்க வேண்டும். இதன்மூலம் பெண் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த முடியும். அரசு அனைத்து மலைக்கிராம பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மலைக் கிராம பள்ளிகளிலும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கான வாகன வசதியை அரசு ஏற்படுத்த முன்வரவேண்டும். பெண் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுத்து நிறுத்த சட்டங்களை கடுமையாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனா். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
படவரி...
கல்வராயன் மலைக்கிராமமான மணியாா்பாளையம் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியா் (பொ) சந்திரன் தலைமையில் சா்வதேச குழந்தைகள் உரிமை தினம் கொண்டாடிய மாணவிகள்.

