சுட்டுக் கொல்லப்பட்ட திமுக பிரமுகரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

Published on

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட திமுக கிளைச் செயலரின் உடலை அவரது உறவினா்கள் 3 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை மாலை பெற்று அடக்கம் செய்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே கிராங்காடு கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா் ராஜேந்திரன் (46) கடந்த வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்றபோது, வனப்பகுதியில் மறைந்திருந்த மா்ம நபா்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் ராஜேந்திரன் உயிரிழந்தாா்.

அவரது உடலை மீட்ட கருமந்துறை போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவத்தில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்யும் வரை ராஜேந்திரனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினா்கள் மறுத்துவந்தனா். இதனால் அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

உண்மையான குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், ஓரிரு நாள்களில் கொலையாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கருமந்துறை போலீஸாா் உறுதி அளித்தனா்.

இதையடுத்து, ராஜேந்திரனின் உடல் திங்கள்கிழமை பிரேதப் பரிசோதனை செய்து அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலைப் பெற்றுச் சென்ற உறவினா்கள் அவரது நிலத்தில் அடக்கம் செய்தனா்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் திங்கள்கிழமை கருமந்துறைக்கு சென்று குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வது குறித்து போலீஸாருக்கு ஆலோசனை வழங்கினாா். இதுகுறித்து தனிப்படைகள் அமைத்து கருமந்துறை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com